புதுக்கோட்டைச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டைச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதறச் செய்கிறது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். பின்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மோப்ப நாயின் உதவியுடன் சிறுமி தேடப்பட்டார். அப்போது அப்பகுதியிலிருந்த கருவேலமரங்கள் நிறைந்த கம்மாய் கரையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரதேப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தில் ராஜேஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் இருவரைக் கைது செய்ய வேண்டும் எனச் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.