Barcelona green axes @_dmoser, twitter
டிரெண்டிங்

”நிம்மதி வேணும்னா கார்களுக்கு தடா” - மன ஆரோக்கியத்துக்காக பார்சிலோனாவில் எடுக்கப்பட்ட முன்னெடுப்பு!

மக்களை காப்பதன் பொருட்டு பார்சிலோனாவைச் சேர்ந்த நகராட்சி நிர்வாகம் ஒன்று மிக முக்கியமான அத்தியாவசியமான முன்னெடுப்பை கையிலெடுத்து அதனை செயல்படுத்தியும் வருகிறது.

Janani Govindhan

உடல்நல ஆரோக்கியம் எந்த அளவுக்கு முக்கியமோ அதற்கு எள்ளளவும் குறைவாக இல்லாததுதான் மனநல ஆரோக்கியமும். தற்போது இருக்கும் பரபரப்பு நிறைந்த வாழ்க்கையில் மன ரீதியான பிரச்னைகள் பலவும் மேலோங்கி வருவதால் பலரும் தத்தம் வேலைகளில் கூட முறையாக கவனத்தை செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியான சந்தர்ப்பங்களில் இருந்து மக்களை காப்பதன் பொருட்டு பார்சிலோனாவைச் சேர்ந்த நகராட்சி நிர்வாகம் ஒன்று மிக முக்கியமான அத்தியாவசியமான முன்னெடுப்பை கையிலெடுத்து அதனை செயல்படுத்தியும் வருகிறது. அதன்படி, பொதுவெளியை பசுமையான பகுதிகளாக மாற்றும் பொருட்டு சில இடங்களில் மரங்களை நட்டு வைத்து வருகிறார்கள். ஆனால் இது சுற்றுப்புற சூழலோடு மக்களின் மன நிம்மதிக்கும் வழிவகுப்பதால் இதனை முழு வீச்சில் செயல்படுத்தவும் அந்த நகராட்சி நிர்வாகம் தவறவில்லை.

ஆகையால், பார்சிலோனா முழுக்க பசுமை மயமாக்கும் வகையில் குறிப்பிட்ட ஒரு பகுதி முழுவதும் பசுமை மண்டலமாக மாற்றப்பட்டு அங்கு பொது போக்குவரத்து மற்றும் அவசரகால வாகனங்கள், சைக்கிள் ஆகியவை நீங்கலாக கார்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு பசுமையான மரக்கன்றுகள், தாவரங்களை நட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் யாரும் இருக்கக் கூடாது என்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நடைமுறை குறித்து கடந்த 2021ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இது மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமைதியாகவும் மனதுக்கு இனிமையாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதுபோன்று பசுமையான இடங்களை பார்க்கும் போது தனிமை எண்ணங்களில் இருந்து மீள முடிகிறது என்றும், வாகனங்களால் வரும் காற்று மாசு குறைந்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுபோக பார்சிலோனாவின் உலகளாவிய ஆரோக்கியத்திற்கான நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த பசுமை அச்சுகள் குறித்த நடைமுறை குடியிருப்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதையும் உறுதிபடுத்தியிருக்கின்றன. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்த முயற்சியின் மூலம் மோசமான மனநல ஆரோக்கியம் ஏற்படுவது 14 சதவிகிதம் தடுக்க முடிகிறதாம். மேலும், மனநல நிபுணர்களிடம் சிகிச்சைக்காக செல்வோரின் எண்ணிக்கையும் 13 சதவிகிதமாக குறைக்க முடியும் என்றும், மன அழுத்தங்களுக்கான எதிர்ப்பு மருந்துகளை 13 சதவிகிதமும், மயக்க மருந்துகளின் பயன்பாட்டை 8 சதவிகிதமும் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.