திமுகவில் இரண்டு பதவிகளை வகிப்பவர்கள் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். இந்நிலையில் கட்சியின் செயல்தலைவராக உள்ள ஸ்டாலின், திமுகவின் பொருளாளர் பதவியை வகித்து வருகிறார். அதனை ராஜினாமா செய்ய அவர் முடிவெடுத்துள்ள நிலையில் , அதனை கைப்பற்ற பலமுனை போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது
கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ள ஆ.ராசாவுக்கு அந்த பதவி கொடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் , சில மூத்த தலைவர்களுக்கும் அந்த பதவியின் மேல் ஆசை உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகனுக்கு பொருளாளர் பதவியை தர வேண்டும் என பலர் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதற்கிடையில் முன்னாள் அமைச்சர் வேலு , டி.ஆர்.பாலு ஆகியோரும் அதனை பெற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழியை அந்த பதவிக்கு கொண்டு வர சிலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், கனிமொழி தனக்கு டெல்லியே போதுமென்று கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதிக்கும் முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யார் அடுத்த பொருளாளர் என்ற எதிர்பார்ப்பு திமுக முழுக்க நிலவுகிறது.