மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தும் பேனர் கலாசாரத்தை வேரறுக்க வேண்டும் என்று திமுக தொண்டர்களை அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், எனது காலில் விழ வேண்டாம் என்று ஏற்கனவே நான் விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று அப்பழக்கத்தை திமுகவினர் அடியோடு நிறுத்திவிட்டனர். பயனற்ற ஆடம்பர செயல்பாடுகள் மக்களிடம் வெறுப்பை உண்டாக்கி, திமுகவினரை அவர்கள் அன்னியப்படுத்திவிடுவார்கள் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதேபோல், பேனர் வைக்கும் கலாசாரத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அதனை அலட்சியப்படுத்துவது போன்று அண்மைக்காலமாக சில நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கும் கலாசாரம் தலைதூக்கியிருப்பது வேதனை அளிக்கிறது. இனியும் அந்த பழக்கம் தொடர்ந்தால், அவ்வாறான செயலில் ஈடுபடும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.