மக்களை ஆசை வார்த்தை காட்டி திசைதிருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய ஒரு தேர்தல் அறிக்கைதான் மோடி அரசின் இந்த இடைக்கால பட்ஜெட் என திமுகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2022ல் புதிய இந்தியா, 2030ன் பத்து தொலைநோக்கு திட்டங்கள் என பல கண்ணைக் கவரும் அறிவிப்புகள் மூலம், அரசியல் சட்டத்தை துச்சமென மதித்து செயல்படும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் இடைக்கால நிதியமைச்சர் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்குப் பதில் முழுமையான நிதி நிலை அறிக்கையைப் படித்திருக்கிறார்.
அதில் இடம்பெற்றுள்ள சில அறிவிப்புகள் உள்நோக்கம் நிறைந்த அறிவிப்புகளாகவே அமைந்துள்ளன. இரு ஹெக்டேர் நிலத்திற்குக் குறைவாக உள்ள விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் நிதியுதவி, ஐந்து லட்சம் ரூபாய் வரை தனி நபர் வருமானத்திற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை என்ற இரட்டை அறிவிப்புகள் வெளிப்படையாக வரவேற்புக்குரியவை போல் இருந்தாலும், இதன் மூலம் விவசாய வாக்காளர்களில் ஒரு சிறு பகுதியினரை கொண்டு மத்திய பா.ஜ.க. அரசு பயணிக்க முற்படுவது புரிகிறது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லிக்கு பேரணி நடத்தியபோது, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது மத்திய அரசின் வேலை அல்ல. மாநில அரசின் வேலை என தெரிவித்த மத்திய அரசு இப்போது விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல் காட்டுவதை எப்படி நம்புவது?
இந்தக் குறைந்த பட்ச அறிவிப்பை வெளியிடவே பா.ஜ.க. அரசுக்கு நான்கு வருடங்கள் தாமதித்துள்ள நிலையில் “நாங்கள் தீர்மானமாகவும், நிலையாகவும், தூய்மையாகவும் அரசு நிர்வாகத்தை அளித்துள்ளோம்” என்று நிதி நிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் “பதினைந்து லட்சம் வங்கிக் கணக்கில் போடும்” வாக்குறுதி தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை. “ஊழலற்ற அரசு” என்ற அறிவிப்பின் கீழ் “லோக்பால் அமைத்து விட்டோம்” என்று குறிப்பு இல்லை. “பெட்ரேல் - டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும்” எந்த முடிவும் இல்லை. அதற்குப் பதில் தமிழக விவசாயிகள் எதிர்க்கும் “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுப்போம்” என்ற அதிர்ச்சி அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
வருமான வரித்துறையை சீரமைக்கிறோம் என்ற பெயரில் இருக்கின்ற வேலை வாய்ப்புகளையும் பறிக்கும் வகையில் வருமான வரித்துறையை முற்றிலும் தனியார் மயமாக்கும் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, கெடுபிடி அறிவிப்புகள், விண்ணை முட்டும் விலை வாசி உயர்வு, கலால் வரியாக மட்டும் 16 லட்சம் கோடியை மக்களிடமிருந்து வசூலித்து விட்டு பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து ஏற்றிக் கொண்டிருப்பது, 45 வருடங்களில் காணாத வேலை வாய்ப்பின்மை, “ரபேல் ஊழல்”- இப்படி கடந்த ஐந்து வருடங்கள் இந்தியாவில் ஒரு சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால் இது பட்ஜெட் அல்ல! பாரத மக்களை ஆசை வார்த்தை காட்டி திசைதிருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய ஒரு தேர்தல் அறிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.