டிரெண்டிங்

ஜனவரி 4ல் திருவாரூர் திமுக வேட்பாளர் அறிவிப்பு - ஸ்டாலின்

ஜனவரி 4ல் திருவாரூர் திமுக வேட்பாளர் அறிவிப்பு - ஸ்டாலின்

webteam

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜனவரி 4 ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் எம்.எல்.ஏவாக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் இவர் பதவி வகித்து வந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

 இதற்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருவாருர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி முதல் வேட்பு மனுவை திரும்ப பெறலாம் எனவும் மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14 ஆம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஜனவரி 4 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் எனவும் போட்டியிட விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஜனவரி 2 முதல் 3 ஆம் தேதி வரை வழங்கலாம் எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

மேலும், வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் எனவும் விண்ணப்ப படிவம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் செலுத்தி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜனவரி 4 ஆம் தேதி அறிவிக்கப்படுவார். போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும். வெற்றி பெறக்கூடிய அளவுக்கு எங்களின் வியூகம் அமைந்திருக்கும். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது” என தெரிவித்தார்.