டிரெண்டிங்

அதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்

அதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்

webteam

மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவக்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு மாத காலமாகியும் ஆளுநர் இதுகுறித்து முடிவு அறிவிக்கவில்லை.

ஆளுநர் ஒப்புதல் அறிவிக்கும் வரை மருத்துவ கலந்தாய்வு நடத்தப்போவதில்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து நேற்று, தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், அன்பழகன், சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு ஆளுநரும் விரைவில் ஒப்புதல் அளிக்க சம்மதம் தெரிவித்ததாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக்கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார். கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.