டிரெண்டிங்

“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு

“நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை” - சபாநாயகர் ஜெயசூர்யா அறிவிப்பு

rajakannan

இலங்கை நாடாளுமன்றத்தில் புதிதாக பதவியேற்ற பிரதமர் ராஜபக்சவுக்கு அவையில் பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். 

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை அக்டோபர் 26-ம் தேதி புதிய பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேன. ராஜபக்ச பிரதமராக பதவியேற்றது முதல் இலங்கை அரசியலில் ஒரு குழப்பமான நிலை நீடித்து வருகிறது. ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதை உணர்ந்து கொண்ட அதிபர் சிறிசேன, கடந்த நவம்பர் 9 நாடாளுமன்றத்தை கலைத்து அதிரடியாக உத்தரவிட்டார். அதோடு, ஜனவரி 5 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட அதிபர் சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிபர் சிறிசேனவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. மேலும், பொதுத் தேர்தலுக்கான பணிகளுக்கு தடைவிதித்ததோடு, நாடாளுமன்றம் நடைபெற தடையில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இது ரணில் விக்ரமசிங்கே தரப்புக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

உச்சநீதிமன்றம் தடைகளை நீக்கியதை அடுத்து இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது. அப்போது, பிரதமர் ராஜபக்சவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்க தரப்பு ஐக்கிய தேசிய கட்சி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது, அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. பின்னர், ராஜபக்ச தரப்பினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

ராஜபக்ச தரப்பினர் வெளிநடப்பு செய்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனையடுத்து, 225 எம்.பிக்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். குரல் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானமத்திற்கு பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து, நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், “இலங்கை உச்சநீதிமன்றம் அதிபர் சிறிசேனவின் நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. அதனால், நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்வுகளும் தற்காலிகமானவே. நாடாளுமன்றத்தில் ராஜபக்சவை பிரதமராக ஏற்றுக் கொண்டதே வியப்பளிக்கிறது. இதுபோக, ராஜபக்ச சபாநாயகராக நியமித்த குணவர்த்தனே நிலை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு சொல்லும் வரை குழப்பம் நீடிக்கும்” என்றார். 

ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில், அவர் இனி பிரதமராக இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், இதனால், ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மை இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது. இருப்பினும், நாடாளுமன்றத்தில் அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. மேலும், மற்றொருவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் இன்னும் அதிபர் சிறிசேனவின் வசமே உள்ளது.