டிரெண்டிங்

“ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக்கொண்டு வதந்தி பரப்புகின்றனர்” - குஷ்பூ

“ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக்கொண்டு வதந்தி பரப்புகின்றனர்” - குஷ்பூ

webteam

ட்வீட்டுக்கு இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு தான் பாஜகவில் இணையப்போவதாக வதந்தி பரப்புகின்றனர் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கட்சி எனக்கு சில வேலைகள் கொடுத்துள்ளது. அதனால் டெல்லி வந்துள்ளேன். நான் பாஜகவில் இணைவதாக வதந்திகள் உள்ளது. இணைந்தால் நல்லா இருக்கும் என்று முருகன் நினைத்துள்ளார். குஷ்பூ பாஜக வந்தால் நல்லா இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் காங்கிரஸில் நன்றாக இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன்.

ஒரு ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக்கொண்டு நான் பாஜகவில் இணையப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள். நான் ஒரு உள்துறை அமைச்சருக்கு உடல்நலம் பெற வேண்டும் என வாழ்த்து சொன்னேன். இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து சொல்லியுள்ளேன். என்னைப் பொருத்தவரை ஒரு ஆரோக்கியமான அரசியல் இருக்க வேண்டும்.

பாஜகவினர் பலர் என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லியிருந்தார்கள். நானும் நன்றி தெரிவித்திருந்தேன். என் மூலமாக ஒரு ஆரோக்கியமான அரசியல் உருவாவது எனக்கு சந்தோஷமாக உள்ளது.

ஹத்ராஸ் பெண்ணிற்கு நடந்த கொடுமை குறித்து ஒரு பாஜக தலைவர்கள் கூட குரல் கொடுக்கவில்லை. ஒரு பெண்ணிற்கு கொடுமை எங்கு நடந்தால் என்ன? இந்தியா நமது நாடு. நம் வீட்டு பெண்ணிற்கு நடந்தால்தான் கேள்வி கேட்போமா? பாஜகவில் எத்தனை பெண் தலைவர்கள் இருக்கின்றனர். இதில் ஒருவர் கூட குரல் எழுப்பவில்லை. இதைப்பற்றி பேசவில்லை. அதுதான் எனக்கு கவலையாகவும் கோபமாகவும் உள்ளது.” எனத் தெரிவித்தார்.