டிரெண்டிங்

யார் இந்த ராம்நாத் கோவிந்த்?

webteam

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநரான ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தின் சமர் பிரிவில் பிறந்த ராம்நாத் கோவிந்த், வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர். தெஹாத் கான்பூர் மாவட்டத்தில் 1945ம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 71 வயது ஆகிறது. 
ராம்நாத் கோவிந்த் கான்பூர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து விட்டு டெல்லிக்குச் சென்று ஐஏஎஸ் நுழைவுத் தேர்வுக்குத் தயாரானார். ஆனால் இரண்டு முறை ஐஏஎஸ் தேர்வு எழுதியும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. மூன்றாவது முறை மறுபடியும் எழுதி ஒரு வழியாகத் தேர்ச்சி பெற்றார். ஆனால் என்ன காரணத்தாலோ அவர் ஐஏஎஸ் அதிகாரியாகவில்லை. சட்டத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, படித்து வழக்கறிஞரானார்.

கடந்த 1977ல் ஜனதா கட்சியின் ஆட்சியின் போது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் உதவியாளராக கோவிந்த் பணியாற்றினார். இதுவே கோவிந்தின் அரசியல் வாழ்க்கைக்கு அடிகோலியது. கடந்த 1990 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராகக் களமிறங்கிய ராம்நாத் கோவிந்த், அந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இந்த தோல்வியை அடுத்து இவர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதேநேரம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து இரு முறை மாநிலங்களவை எம்பியாகவும் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பாஜகவின் தலித் பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராக 1998ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை ராம்நாத் கோவிந்த் பதவி வகித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பையும் ராம்நாத் கோவிந்த் வகித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி மற்றும் மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கிற்கு மிகவும் நெருக்கமானவராகவும் ராம்நாத் கோவிந்த் கருதப்படுகிறார். ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா சார்பில் உறுப்பினராகப் பதவி வகித்த அவர், கடந்த 2002 அக்டோபரில் நடந்த கூட்டத்திலும் உரையாற்றியுள்ளார். ராம்நாத் கோவிந்த் கடந்த 2015 ஆண்டு பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது அங்கு பெரும் சர்ச்சை எழுந்தது. புதிதாக நியமிக்கப்பட உள்ள ஆளுநரின் பெயரை முதல்வரான தனக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என நிதிஷ் குமார் குற்றஞ்சாட்டியிருந்தார்.