டிரெண்டிங்

கைவிடப்பட்டதா ஜெயலலிதாவின் வியூகம்? - அதிமுக அணுகுமுறையால் கொதிக்கும் தொண்டர்கள்!

கைவிடப்பட்டதா ஜெயலலிதாவின் வியூகம்? - அதிமுக அணுகுமுறையால் கொதிக்கும் தொண்டர்கள்!

webteam

தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலில் குளறுபடி வருவது என்பது அதிமுகவுக்கு புதிது கிடையாது. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேமுதிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், ஆகிய பிரதான கட்சிகள் இருந்தன. ஆனால், யாரும் எதிர்பார்க்காமல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாமே கோபப்படும் வகையில் முதல் பட்டியலை 2011-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி இரவு வெளியிட்டார் ஜெயலலிதா. இதேபோன்று 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.

இவ்வாறு, தான் செய்வதே சரி என ஜெயலலிதாவின் நடவடிக்கை இருக்கும் எனவும், ஜெயலலிதாவின் வேட்பாளர்கள் தேர்வும் பல வியூகங்களை அமைத்து இருக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வேட்பாளர்கள் தேர்விலும் திடீரென அடிமட்ட தொண்டர்களின் பெயர்கள் இடம்பெறும். இதுபோன்று பல வியூகங்கள் ஜெயலலிதாவின் தேர்வில் தென்படும். ஆனால், வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என யாரும் போர்க்கொடி தூக்கமாட்டார்கள். தொண்டர்களை கலக்கமடைய செய்யாது. தனது மனதிற்கு பட்டால் மட்டுமே வேட்பாளர்களை தேர்வு செய்வார் ஜெயலலிதா.

தற்போதைய அதிமுக, ஜெயலலிதாவின் வியூகத்தை தவறவிட்டதையே நிரூபிக்கிறது தமிழகத்தின் நிகழ்வுகள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதிலிருந்தே பல்வேறு போராட்டங்களும் அதிருப்திகளும் வெளியாகத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்களை மாற்றி அறிவிக்க வேண்டும் என அதிமுகவினரே போக்கொடி தூக்கி வருகின்றனர். அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என மொத்தம் 74 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் தற்போதைய அமைச்சர்கள் 27 பேரும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 47 பேரும் அடங்குவர். முன்னாள் அமைச்சர்கள் 12 பேருக்கு தேர்தலில் களம் காண அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. அதே போன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேரும், முன்னாள் எம்.பி.க்கள் 12 பேரும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது மாநிலங்களவை எம்.பிக்களாக இருக்கும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் புதுமுகமாக 61 பேர் போட்டியிடுகின்றனர்.

நிலோஃபர் கஃபில், வளர்மதி, பாஸ்கரன் ஆகிய 3 அமைச்சர்கள் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. செம்மலை, தோப்பு வெங்கடாசலம், மணிகண்டன், ராஜவர்மன், ஆறுகுட்டி உள்ளிட்ட 41 எம்எல்ஏக்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அல்லாத 103 பேருக்கு அதிமுக வாய்ப்பு வழங்கி உள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் போர்க்கொடியை தூக்க ஆரம்பித்துவிட்டனர். அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்களில் சிலரை மாற்றக் கோரி அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுகள் அதிமுகவில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியே எழுந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல் புதிய முகங்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளன எனவும், பெண்களுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன எனவும், இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதிதுவம் கொடுக்கப்படவில்லை எனவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கூறும்போது, “அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது சர்ஃப்ரைசிங்கான வேட்பாளர் பட்டியல் இல்லை. குறிப்பாக தற்போதைய முக்கியமான அமைச்சர்களுக்கு இந்த முறை இடமில்லை. கூட்டணி கட்சிகளின் இணக்கத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கேட்ட தொகுதிகளை அதிமுக வழங்கியுள்ளது. தன்னுடைய கட்சி வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றி நிறுத்தியிருப்பார். உதாரணத்திற்கு, பென்னாகரம் தொகுதியில் அன்புமணியை எதிர்த்து கே.பி முனுசாமியை நிறுத்தியிருந்தார். நத்தம் விஸ்வநாதனுக்கு நத்தம் தொகுதியை கொடுக்காமல் ஆத்தூருக்கு அனுப்பியிருந்தார். கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை கூட சரத்குமார் தென்காசி கேட்டபோது திருச்சந்தூர் தொகுதியை மாற்றியிருந்தார். இப்படி ஒருவிதமான சர்ஃப்ரைசிங் இருக்கும். ஆனால் தற்போது அதிகமாக நெகட்டிவ் கொண்ட அமைச்சர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்கும் இறங்கிபோயுள்ளது. என்னை பொறுத்தவரை அதிமுக பாஜக கூட்டணிக்கு வெற்றி குறைவுதான்” என்றார்.

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், “தற்போதைய அதிமுக இரட்டை தலைமை. இவர்களால் ஜெயலலிதா போன்று புது டீமை இறக்க முடியாது. ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை. பலமானவர்கள், பண பலம் உள்ளவர்களுக்கு சீட் கொடுத்துள்ளனர். புது முகங்களை களம் இறக்கினால் எதிர்ப்பு குரல்கள் கண்டிப்பாக வலுக்கும். அதனால்தான் குறைவான அளவே புதுமுகங்களை நிறுத்தியுள்ளன” எனத் தெரிவித்தார்.

அதிமுகவின் ஜவஹர் அலி கூறுகையில், “தமிழக தேர்தல் களத்தில் அதிமுக முழு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. என்னைப்போன்று செய்திதொடர்பாளர்களாக இருந்த வைகைச்செல்வன், ஜே.சி.டி.பிரபாகரன், கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளன. வெற்றி இலக்கு என்ற அடிப்படையில்தான் இந்த தேர்வை செய்துள்ளனர். தேர்வாகாதவர்களுக்கு வருத்தமாக இருக்கத்தான் செய்யும். ஏற்கெனவே செய்த சேவைகளின் அடிப்படையில்தான் முன்னாள் தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை தொகுதி மக்களுக்கு இரண்டு தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.