டிரெண்டிங்

பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதை அகிலேஷ்-மாயாவதி கூட்டணி தடுக்கும்?

பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதை அகிலேஷ்-மாயாவதி கூட்டணி தடுக்கும்?

webteam

அகிலேஷ் - மாயாவதி கூட்டணி 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதை பாதிக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலேயே மொத்தமுள்ள 403 இடங்களில் 325 தொகுதிகளை கைப்பற்றி அக்கட்சி அசத்தியது. இதில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகளுக்கு மொத்தமே 54 இடங்கள் தான் கிடைத்தன. 2012 தேர்தலில் 238 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த சமாஜ்வாடிக்கு இது மிகப்பெரிய அடியாக அமைந்தது. அதேபோல், ஏற்கனவே ஆட்சியில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சி வெறும் 19 இடங்களில் மட்டுமே வென்றது. 2012 பகுஜன் சமாஜ் 80 இடங்களை கைப்பற்றி இருந்தது. 

பாஜக மாபெரும் வெற்றி அடைந்ததால், சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் களக்கம் அடைந்தன. இதனால், அந்தக் கட்சிகள் தங்களது எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டன. இதனால், அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் உதவியை நாடினார். அவர் அதற்கு ஒப்புக்கொள்ள, இந்தக் கூட்டணிக்கு நல்ல பலன் கிடைத்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வரின் தொகுதிகளிலேயே பாஜக தோல்வியை தழுவியது. 

இதனால், அடுத்து வரும் மக்களவை தேர்தலில் இரண்டு கட்சிகளும் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டது. அதேபோல், சமாஜ்வாடி கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், மூன்றாவதாக மாயாவதியும் இதில் சேர்வார் என்று பேசப்பட்டது. பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. தொகுதி உடன்பாடு எட்டாததால் கூட்டணி முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஆனால், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களிலும் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சி தனித்தனியே போட்டியிட்டது. பகுஜன் சமாஜ் கணிசமான இடங்களை கைப்பற்றி, காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உதவும் நிலைக்கு சென்றது. மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றதால், காங்கிரஸ் கட்சியும் தன்னை வலிமையான இடத்துக்கு கொண்டு வந்தது.  

இதனிடையே, சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையிலான கூட்டணி குறித்த தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. வரும் ஜனவரி 5ம் தேதி மாயாவதி பிறந்தநாளன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றால், நாட்டிலே அதிக மக்களவை தொகுதிகள் கொண்ட மாநிலமாக இருப்பதுதான். உத்தரப் பிரதேசத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சிகள், கூட்டணியில் யார் மத்தியில் ஆட்சியை பிடிப்பார்கள் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பார்கள். 

இந்நிலையில், சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைந்தால், அது பாஜக மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று ஏபிபி நியூஸ், சி ஓட்டர்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் கூட்டணி அமையாவிட்டால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களுடன் ஆட்சியைப் பிடிக்கும். கூட்டணி அமைந்தால் 247 இடங்களை மட்டுமே பாஜக கூட்டணி பிடிக்கும். ஆக 25 இடங்கள் குறைவாக இருக்கும். 

2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம், உத்தரப் பிரதேசத்தில் அக்கட்சி மொத்தமுள்ள 80 இடங்களில் 71ஐ கைப்பற்றியதுதான். 

சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி உத்தரப் பிரதேசத்தில் 50 இடங்களை பிடிக்கும், பாஜக கூட்டணி 28 இடங்களை பிடிக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. பாஜக கூட்டணி ஒடிசாவில் 21 தொகுதியில் 15ஐ பிடிக்கும். மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிக அளவிலான இடங்களை பிடிக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.