டிரெண்டிங்

``கடவுளை பாக்கனுமா? வெறும் ரூ.17 லட்சம் மட்டும் கட்டுங்க போதும்” - போஸ்டர் ஒட்டிய பாஸ்டர்!

``கடவுளை பாக்கனுமா? வெறும் ரூ.17 லட்சம் மட்டும் கட்டுங்க போதும்” - போஸ்டர் ஒட்டிய பாஸ்டர்!

JananiGovindhan

கடவுளை காட்டுகிறேன் என தலைக்கு 100 ரூபாய் வாங்கி, அப்படி கடவுள் தெரியலைனா 200 ரூபாயாக திருப்பி தரேன்னு வாக்கு கொடுத்து அழைத்துப்போய் அனைவருக்கும் வடிவேலு டிமிக்கி கொடுக்கும் காட்சி காக்கை சிறகினிலேயே படத்தில் இடம்பெற்றிருக்கும்.

இந்த காமெடி காட்சி பட்டித் தொட்டியெங்கும் இப்போதும் பிரபலமான ஒன்றுதான். ஆனால் நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும் பணம் சம்பாதிப்பதற்காக இப்படியான பல வழிகளை பலரும் மேற்கொள்வதும், இதனால் சாமானிய மக்கள் ஏமாறுவதும் அங்கும் இங்குமாக தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையிலான ஒரு சம்பவத்தை தென்னாப்பிரிக்காவில் அண்மையில் ஒரு பாதிரியார் நடத்திக்காட்டியிருக்கிறார். அதன்படி தனக்கு கடவுளிடம் நேரடி தொடர்பு இருக்கிறது என்றும், `உங்களுக்கெல்லாம் கடவுளை காட்டுகிறேன். ஆனால் காசு கொடுத்தால்தான் இது நடக்கும்’ என்று போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்தியிருக்கிறார் புதேலி (M.S.Budeli) என்ற அந்த பாதிரியார்.

அந்த போஸ்டரில் ஒரே நாளில் திருமணம் நடக்கவும், கடன்கள் எல்லாம் அடைக்கவும், எதிர்காலத்தை பார்க்க வேண்டுமானால் தலா 3,55,000 rand அதாவது இந்திய மதிப்பில் 17 லட்சத்து 23 ஆயிரத்து 563 ரூபாய் கட்டணமாக கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பணம் கட்டினால் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று கடவுளை பார்க்க வைப்பேன் என்றும் கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் அந்த பாதிரியா புதேலி.

தென் ஆப்பிரிக்காவில் இதுபோல நடப்பது முதல் முறை கிடையாது என்றும், இதற்கு முன்பும் பல பாதிரியார்கள் `கடவுளை நேரில் சந்திக்க வைக்கிறேன், ஆசீர்வதிக்கிறேன்’ என்றெல்லாம் கூறி பணம் வசூலித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.