பிரியாத வரம் வேண்டும் சோனியா மகி யூட்யூப் சேனல் ஃபேஸ்புக்
டிரெண்டிங்

ரகுவுடன் அனுவை சேர்த்த ஸ்டெல்லா! அடுத்து என்ன? கிளைமேக்ஸை நெருங்கும் YTSeries பிரியாத வரம் வேண்டும்!

வழக்கமான கதை! ஆனால், அட்டகாசமான திரைக்கதை.

ஆதிமூலகிருஷ்ணன்

விடிந்தால் வேறொருவரோடு நிச்சயதார்த்தம் எனும் நிலையில், ஸ்டெல்லாவின் உதவியோடு அனு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சர்ச் வாசலில் காத்திருக்கும் காதலன் டாக்டர் ரகுவையும் அடைந்துவிட்டாள். ஆனால், அவர்கள் தப்பிச்செல்ல ஒரு சில மணி நேரம் கூட அவகாசம் கிடைக்கவில்லை... அவ்வளவு வேகமாக விஷயம் சில நிமிடங்களிலேயே காட்டுத்தீ போல பரவிவிட்டது. அனுவை அனுப்பிவிட்டு வீடு திரும்பும் ஸ்டெல்லா மடக்கப்படுகிறாள்.

பிரியாத வரம் வேண்டும் YT series

நிச்சயதார்த்தம் முடிந்தப்பின், எப்படியாவது கல்யாணத்தை நிறுத்தி காதலர்களை சேர்த்து வைக்கிறேன் என்று உறுதி தந்த ஸ்டெல்லாவின் கணவனும், அனுவின் கசின் சகோதரனுமான முத்துமாரி கோபம் கொள்கிறான். பெரும் பணக்காரரான ரகுவின் அப்பாவும் கோபம் கொள்கிறார். கூடவே நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கார்த்திக்கும் கோபம் கொள்கிறான். தப்பிக்க போதுமான நேரமுமில்லாத நிலையில் இவர்களிடமிருந்தெல்லாம் காதலர்கள் தப்புவார்களா? அடுத்து என்ன எனும் பரபரப்பான முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது கதை!!

இது ஏதாவது சினிமாவா? டிவி சீரியலா? வெப் சீரியஸா என்று கேட்கிறீர்களா?

அதெல்லாமில்லை. இது ஒரு ஜாலியான யூடியூப் கார்ட்டூன் தொடர்.

அட, இதிலென்ன விசேசம்? வழக்கமான கதைதானே என்கிறீர்களா?

பிரியாத வரம் வேண்டும் YT series

அதேதான். வழக்கமான கதை! ஆனால், அட்டகாசமான திரைக்கதை. கூடவே, எந்த சினிமாவிலும், வெப் சீரிஸிலும் காண முடியாத படியான ஒரு சிறப்பு, இந்த டப்பா கார்ட்டூன் தொடருக்கு உண்டு. அதுதான் கேரக்டரைசேஷன்.

இதில் வரும் கேரக்டர்கள்...

முத்துமாரி (ஹீரோ),

ரகு (செகண்ட் ஹீரோ),

வர்கீஸ் (நண்பர்),

செல்வா (நண்பர்),

ஸ்டெல்லா (ஹீரோயின்),

அனு (செகண்ட் ஹீரோயின்),

சின்னப்பொண்ணு (வர்கீசின் மனைவி),

உமா (செல்வாவின் மனைவி),

வசந்தி (செல்வாவின் அண்ணன் மனைவி)

லட்சுமி (முத்துமாரியின் அம்மா)

ராணி (லட்சுமியின் தோழி)

இளவரசி (அனுவின் அம்மா, லட்சுமியின் நாத்தனார்)

முருகன் (ரகு வீட்டு பணியாள்)

இப்படி இன்னும் பல கேரக்டர்கள். ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் இடையே தனித்துவமான உறவுகள், தொடர்புகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணவார்ப்பு. யாரும் அவரவர் வார்ப்பிலிருந்து விலகுவதில்லை. ஒரே ஒரு கேரக்டர் கூட ஸ்டீரியோ டைப் கிடையாது.

பிரியாத வரம் வேண்டும் YT series

இப்படி விதவிதமான நியர் பர்பெக்ட் கேரக்டர்களை உருவாக்குவதும், அவற்றை வைத்து கதை சொல்வதும் மிக அரிதான விஷயம். பெரிய பெரிய இயக்குநர்களே ஒரு சினிமாவில் நாலே நாலு கேரக்டர்களை உருவாக்கி அவற்றுக்கு சரியான வடிவம் தருவதற்குள் 'போதும் முடியல' என சோர்வடைந்து விடுகிறார்கள். ஆனால், இந்தத்தொடரின் ரைட்டர் சோனியா இப்படியான எண்ணற்ற கேரக்டர்களை உருவாக்கி நடமாட விட்டிருக்கிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், கதை, திரைக்கதை, அனிமேசன், இயக்கம், ஒலிப்பதிவு, டப்பிங் என அனைத்தும் அவர் ஒருவரே பண்ணுகிறார் என்பதுதான். மிகமிகக் குறைவான ஸ்கோப் இருக்கும் ரெடிமேட் அனிமேஷனில் இதை உருவாக்கிட தனியாளாய் மிகக் கடினமாக உழைத்திருக்கிறார். அதை மிக நேர்மையாகவும், நேர்த்தியாகவும் செய்திருக்கிறார். ஒவ்வொரு கேரக்டரும் பேசும் தொனி, பேசும் விதம், வார்த்தைப் பயன்பாடு, குணவெளிப்பாடு எல்லாம் வேறு வேறு தன்மை கொண்டவை. அற்புதம் என்றுதான் சொல்லவேண்டும்.

பிரியாத வரம் வேண்டும் YT series

பிரியாத வரம் வேண்டும் என்ற இந்தத்தொடர் 'சோனியா மகி' எனும் தமிழ் யூட்யூப் சேனலில் வாரம் ஒரு எபிசோடு என்ற வகையில் காணக்கிடைக்கிறது. தொடர் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில், கிளைமேக்ஸில் இருக்கிறது.

தவறாது காணுங்கள்.

நேரமும், ஆர்வமும் இருப்பின் இதே கேரக்டர்கள் இடம்பெறும் முந்தைய தொடரான 'கலாட்டா கல்யாணத்தை'க் காணலாம். முதல் காரணம், அதுவும் நன்றாக இருக்கும். இரண்டாவது காரணம் இந்தத் தொடரில் வரும் கேரக்டர்களை எல்லாம் இன்னும் நெருக்கமாக அறிந்து கொள்ளலாம். கலாட்டாக் கல்யாணத்திலிருந்து உருவான ஸ்பின் ஆஃப் கதையே இந்த 'பிரியாத வரம் வேண்டும்'!

- ஆதி தாமிரா