டிரெண்டிங்

இப்போது மட்டும் ரஜினிக்கு ஏன் இவ்வளவு கோபம்?: கடுமையாக சாடிய நெட்டிசன்கள்..!

Rasus

ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டு கொன்ற போது வராத கோபம்... புயலில் இருந்து கன்னியாகுமரி மீனவர்களை காப்பாற்றாத அரசுகளின் மேல் வராத கோபம்... காவல்துறை எட்டி உதைத்ததில் இளம்பெண் உயிரிழந்தபோது வராத கோபம் ஏன் இப்போது மட்டும் வந்தது என நடிகர் ரஜினிகாந்தை பலரும் சாடி வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 4000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏராளமானோர் போராட்டம் நடத்தியதால் போராட்டக்காரர்கள் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரும் காவல்துறையினரை தாக்கினர்.காவல்துறையினர் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.” என தெரிவித்தார்.

இந்நிலையில் இதுவரை நடிகர் ரஜினிகாந்திற்கு வராத கோபம் இப்போது மட்டும் வருவது ஏன் என பலரும் நடிகர் ரஜினிகாந்தை சாடியுள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பலரும், “ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற போது வராத கோபம்... புயலில் இருந்து கன்னியாகுமரி மீனவர்களை காப்பாற்றாத அரசுகளின் மேல் வராத கோபம்... காவல்துறை எட்டி உதைத்ததில் இளம்பெண் உயிரிழந்தபோது வராத கோபம் ஏன் இப்போது மட்டும் வந்தது” என தெரிவித்துள்ளனர்.

ஒருசிலரோ, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் வேண்டுமென்றே காவல்துறையினர் தீ வைத்து கொளுத்தினர். அப்போதெல்லாம் நீங்கள் குரல் ஏதும் கொடுக்கவில்லையே எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். பல இடங்களில் அப்பாவி பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தும்போது ரஜினி ஏன் மவுனமாக இருந்தார் என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.