டிரெண்டிங்

கர்நாடகா: அமித்ஷா கூட்டத்தில் எதிர்ப்பு கோஷம்

கர்நாடகா: அமித்ஷா கூட்டத்தில் எதிர்ப்பு கோஷம்

rajakannan

கர்நாடகாவில் அமித்ஷா தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மைசூர் நகரில் தலித் தலைவர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இதில், அமித்ஷா கலந்து கொண்டு தலித் தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டேவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பலரும் கோஷமிட்டதோடு மேடையை நோக்கி நகர முற்பட்டனர். தலித்கள், மதச்சார்பின்மை ஆதரவாளர்களை நாயோடு ஒப்பிட்டு பேசியதற்காக அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஹெக்டே மீது பாஜக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஆனால், ஹெக்டேவின் கருத்துடன் பாஜகவுக்கு உடன்பாடில்லை என்று அமித்ஷா கூறினார். இருப்பினும் நீண்ட நேரம் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

கடந்த டிசம்பர் மாதம் பிராமணர் இளைஞர் சங்க நிகழ்ச்சியில் பேசிய ஆனந்த் குமார் ஹெக்டே, “அரசியலமைப்பு சட்டம் மதச்சார்பின்மையை கூறுகிறது என்றும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அரசிலமைப்பு சட்டம் பலமுறை மாற்றப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் மாற்றப்படும். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு நாங்கள் இருக்கிறோம். நாங்கள் மாற்றுவோம். மதச்சார்பற்றவர்கள் என கூறிக் கொள்பவர்களுக்கு சொந்த அடையாளங்கள் எதுவும் கிடையாது” என்ற கருத்தை தெரிவித்து இருந்தார். 

அரசியலமைப்பு சட்டம் குறித்த மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டேவின் கருத்துக்கு தெரிவிப்பு தெரிவித்து சிலர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதில் தலித் தலைவர்கள் மற்றும் மதச்சார்பின்மை ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஹெக்டே, ‘குரைக்கின்ற நாய்கள்’ என்று விமர்சித்தார். 

இந்நிலையில் தான், கர்நாடகாவில் அமித்ஷா கலந்து கொண்ட கூட்டத்தில் தலித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங், “அமிஷ்தாவின் தலித் எதிர்ப்பு மனநிலை மீண்டும் வெளிப்பட்டுள்ளது. அவர் அரசியலில் சிறந்த சந்தர்ப்பவாதியாக உள்ளார். ஹெக்டேவின் கருத்தை வெளிப்படையாக ஒதுக்குகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.