வரவிருக்கும் தேர்தலில் 'குட்டி ஜப்பான்' என்று புகழப்படும் சிவகாசி மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேறியதா? வாக்காளர்களின் மனவோட்டம் இதோ...
'குட்டி ஜப்பான்' என்று புகழப்படும் சிவகாசி, பட்டாசு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற தொகுதி ஆகும். சிவகாசியில் சுமார் 1250-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசுத் தொழிலை சார்ந்து நேரடியாகவும் மறைமுகமாவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். சிவகாசியில் இருந்து ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. பட்டாசுத் தொழில் மட்டுமின்றி, அச்சுத் தொழிலும் சிவகாசியில் மிக பிரபலமானது. இந்தியாவில் அச்சு சம்பந்தமான 60 சதவீத பணிகள் இங்குதான் செய்யப்படுகிறது.
சிவகாசி தொகுதியில் நாயக்கர், நாடார், முக்குலத்தோர் என பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். இதுவரை 14 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்துள்ளது, சிவகாசி தொகுதி. அதில் அதிக அளவாக அதிமுக 5 முறை வென்றிருக்கிறது. மூப்பனார் இருந்தபோது தமிழ் மாநில காங்கிரஸ் இங்கே இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக கடந்த 1991-ம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக ஒருமுறை கூட இந்த தொகுதியில் வெற்றி அடைந்ததில்லை.
கடந்த இரு தேர்தல்களிலும் இங்கே வாகை சூடிய தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 10 ஆண்டுகளாக அமைச்சராகவும் இருந்து வருகிறார். கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசின் ராஜா சொக்கரை 11,748 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சிவகாசி தொகுதி முழுவதும் நாம் பயணம் மேற்கொண்டபோது இத்தொகுதியில் கடந்த பத்தாண்டுகளாக குறிப்பிடும்படியான வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்கிற அதிருப்தி தொகுதி மக்களிடையே நிலவுவதை காண முடிந்தது. வரக்கூடிய தேர்தலில் தங்கள் தொகுதியில் மக்கள் மாற்றத்தை விரும்புவதை உணர முடிகிற அதேவேளையில், புதிய முகங்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கான வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது என்பதனையும் அறிய முடிகிறது. மேலும் தேர்தலில் தங்கள் தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் யார்? அவரின் பின்னணி என்ன? என்பனவற்றையும் கூர்ந்து கவனிப்பவர்களாக இருக்கிறார்கள் சிவகாசி பகுதி மக்கள்.
வரவிருக்கும் தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேறியதா? என்பது குறித்து சிலரிடம் கேட்டோம். வாக்காளர்களின் மனவோட்டம் இதோ..
''ஐயா, நாங்க ஏதாவது ஒரு உதவி கேட்கிறோம். அந்த உதவி செஞ்சிட்டா உங்களுக்கே ஓட்டு போடுவோம். ஆனா அந்த மாதிரி உதவி செய்யக்கூடிய ஆட்கள் இங்க இல்ல.''
''எங்க தெருவுல சகதியா கிடக்குது. ரோடு போட்டு 40 வருஷம் ஆச்சு. ரோடும் போட மாட்டுக்காங்க. வடிகாலும் அமைச்சு தர மாட்டேன்றாங்க. ஓட்டுக்கு ரூபா வேணாம். எங்களுக்கு நல்லது செஞ்சிங்கன்னா ஓட்டு போடுவோம்.''
''கடந்த தேர்தலில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. வடிகால் வசதி இல்ல.. ரோடு எல்லாம் சின்னாபின்னமாகி கிடக்குது. பொதுக் கழிப்பறை வசதிகள் இல்லை.''
''தேர்தல் நெருங்கினதும் 2500 ரூபாய் தர்றாங்க. கொரோனா ஊரடங்கு காலத்துல 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துருக்கலாம்ல.''
''சிவகாசி அரசு மருத்துவமனையில் எந்த வசதியும் இல்ல. சுகாதார சீர்கேடு பெரும் பிரச்சினையாக இருக்குது.''
''அச்சு தொழில் தொடர்பாக சொல்லப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அச்சு நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என சொன்னார்கள். ஆனால் அது செய்யப்படவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் அச்சு நிறுவனங்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்கள். அதுவும் நிறைவேற்றப்படவில்லை.''