ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் பேசிய வைகோவை சிங்களர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய வைகோவை, சிங்களர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதற்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைக் கவுன்சிலுக்கு உள்ளேயே, ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக சிங்களர்கள் சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றிய தன்னை சிங்களவர்கள் மிரட்டியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகார் தெரிவித்திருந்தார். பிரச்னை ஏற்படுத்தி தன்னை வெளியேற்றவும் அவர்கள் திட்டமிட்டதாக கூறியிருந்தார்.