ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் , சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டுமென்பது மத்திய அரசின் நீண்ட நாள் கனவு. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இப்போது வரை அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சட்டமன்றங்களுக்கும் , நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்து பாஜக சார்பில் அக்கட்சி தலைவர் அமித்ஷா சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். கடிதம் சென்றுசேரும் முன் 11 சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் நடத்த மத்திய அரசு தயார் என செய்தி வெளியானது.
தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்றைக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவிக்கையில் “ மத்திய அரசின் திட்டம் சரி என்றாலும் அதற்காக அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும், சில சட்டமன்றங்களின் ஆயுட்காலத்தை குறைக்கவும், சிலவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் வேண்டும். இதெல்லாம் அறிவிப்பாணையால் செய்துவிட முடியாது. உரிய சட்டத்திருத்தம் வேண்டும். அதோடு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரம் இணைக்க வேண்டும் என்றார். இவற்றால் அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை என்று தெரிவித்தார் ராவத்.