டிரெண்டிங்

‘தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது’ - ஹர்திக் படேல் போட்டியிடுவதில் சிக்கல்

‘தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது’ - ஹர்திக் படேல் போட்டியிடுவதில் சிக்கல்

rajakannan

வன்முறை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கோரிய ஹர்திக் படேலின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

குஜராத்தைப் பொறுத்தவரை, படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிதார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் படேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். 2015ம் ஆண்டு அவர் நடத்திய போராட்டத்துக்கு பட்டேல் சமூகத்தினர் பெருமளவு ஆதரவு தெரிவித்தனர். 

இவர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் ஹர்திக் பிரச்சாரம் செய்தார். இவரது பிரச்சாரத்தில் பெரிய அளவில் கூட்டம் அலைமோதியது. பின்னர், குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில், கடந்த மார்ச் 12ம் தேதி  ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முன்னிலையில் ஹிர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனையடுத்து, வருகின்ற மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இதனிடையே, 2015ம் ஆண்டில் ஹர்திக் படேல் நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை காரணமாக ஹர்திக் படேல் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு விஸ்நகர் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. 

மாவட்ட நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹர்திக் படேல் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை அனுமதிக்க கூடாது என குஜராத் அரசின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், ஹர்திக் படேலின் கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. நீதிமன்றத்தில் இந்த உத்தரவால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி, ஹர்திக் படேல் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், உயர்நீதிமன்றம் தன்னுடைய கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்திற்கு செல்வேன் என்று ஏற்கனவே ஹர்திக் கூறியிருந்தார். குஜராத் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 23ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வேட்புமனுதாக்கல் செய்ய இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளதாக, ஹர்திக் படேலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.