தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது. இத்தொடரில் பல்வேறு கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கொரோனா பாதிப்புக்கு இடையே தமிழக சட்டமன்றக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்க உள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது கடினம் என்பதால் விஸ்தாரமாக உள்ள கலைவாணர் அரங்கம் சட்டப்பேரவை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமை ஆக்குவது தொடர்பான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. இக்கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பிரச்னைகள் குறித்து பேச திமுக சார்பில் சபாநாயகர் தனபாலிடம் கவனஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம், அதற்கான நடவடிக்கைகள், செலவுகள், பொருளாதார இழப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம், கிசான் முறைகேடு விவகாரம், அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற அறிவிப்பு குறித்த குளறுபடி உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள சென்னை கலைவாணர் அரங்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி தெளிப்பது, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வது, தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட உள்ளது.