தமிழகத்திற்கு அதிமுக செய்த நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கும், தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிற்கும் தெரியும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தனித்துப் போட்டியிட தேமுதிக எப்போதும் பயந்ததில்லை எனவும் தனித்துப் போட்டியிடும் ஃபார்முலாவை தமிழகத்தில் உருவாக்கியதே தேமுதிக தான் எனவும் தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை எதிர்த்து கேள்வி எழுப்பியவர் விஜயகாந்த் எனவும் 37 தொகுதிகளில் அதிமுக ஜெயித்து தமிழகத்திற்கு என்ன நன்மை கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுகவின் 37 எம்.பி.களால் தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதிமுக எம்.பிகள் 37 பேர் இருந்ததால் தான் காவிரி பிரச்சனைக்காக 47 நாட்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்திற்கு அதிமுக செய்த திட்டங்கள் நாட்டு மக்களுக்கு தெரியும். பிரேமலதா எதை வைத்து பேசுகின்றார் எனத் தெரியவில்லை. எந்த நோக்கத்தில் எந்தக் கருத்தில் பிரேமலதா பேசினார் என்பது தெரிவில்லை. இலை, பூ, கனி சேர்ந்து வெற்றி முரசு கொட்டும்” எனத் தெரிவித்தார்.