டிரெண்டிங்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் விதிகளின்படி நடந்ததா?: முன்னாள் சபாநாயர் சேடப்பட்டி முத்தையா விளக்கம்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் விதிகளின்படி நடந்ததா?: முன்னாள் சபாநாயர் சேடப்பட்டி முத்தையா விளக்கம்

rajakannan

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் தகுதி நீக்கம் சட்டவிதிகளின் நடைபெற்றதா என்பது குறித்து முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சேடப்பட்டி முத்தையா புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டி:

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் தகுதிநீக்கம் பற்றிய 1986 ஆண்டு விதிகளின், 10-வது அட்டவணையின் ஏ பிரிவின் கீழ் கட்சித் தாவியதாக கூறி நடவடிக்கை  எடுத்துள்ளார்கள். 10-ஏ பிரிவின் படி தானாக கட்சியை விட்டு விலகினால் தகுதி நீக்கம் செய்ய முடியும். அதேபோல், 10-பி பிரிவின் படி சட்டப்பேரவைக்குள் கட்சியின் கட்டளையை மீறி வாக்களித்தால் தகுதி நீக்கம் செய்யலாம்.  அப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், 6-வது விதியின் உள்விதி 5-பி படி கட்சியை விட்டு வெளியேறியதற்கான ஆவண சாட்சியங்களை கொறடா அளிக்க வேண்டும். 

இந்த விவகாரத்தில், கொறடா தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் அளித்த மனுவை இணைத்து சபாநாயகரிடம் மனு அளித்தனர். ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் அளித்த மனுவில் தாங்கள் அ.இ.அ.தி.மு.க என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதனால், கட்சி தாவல் என்பதற்கு இங்கு இடமில்லை. இதனால், 7-ம் விதியின் உட்பிரிவு 2-ன் கீழ் போதிய ஆவணங்கள் இல்லை என  கூறி கொறடாவின் மனுவை சபாநாயகர் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

இதனிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சபாநாயகர் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை ஆஜரான வழக்கறிஞர், கொறடா வழங்கிய ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால் சபாநாயகர் அதனை கொடுக்கவில்லை. 7-ம் விதியின் உட்பிரிவு 3-ன் கீழ் உரிய கால அவகாசமும், ஆவண சாட்சியங்களை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் எதுவும் செய்யப்படவில்லை. இது இயல்பான நீதிக்கு எதிரானது.

எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளித்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். சட்டமன்றத்திற்கு வெளியே தனி அணியாக செயல்படுவதை கொறடா தடுக்க முடியாது. சட்டமன்றத்தில் தனி அணியாக செயல்பட்டால்தான் கொறடா நடவடிக்கை எடுக்க முடியும். சட்டமன்றத்திற்குள் வந்து தனி அணியாக செயல்பட்டவர்கள் பன்னீர் செல்வம் அணியினர்தான். வேண்டுமானால் இந்த 10-வது அட்டவணைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

செப்டம்பர் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது, எதுவும் செய்யக்கூடாது என கூறியுள்ளனர். அப்படி இருக்கையில் சபாநாயகர் எப்படி இந்த நடவடிக்கையை எடுத்தார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் அளித்த மனு கொறடாவிற்கு எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அளித்த மனுக்களை முதலமைச்சருக்கு ஆளுநர் அனுப்பி இருக்கிறார். அந்த மனுவை பிரதி எடுத்து கொறடா ஜெயராமன் பயன்படுத்தியுள்ளார். இதனால் ஆவணங்களை தவறாக இணைத்திருப்பது சட்ட விதிமீறல். இதுவரை சபாநாயகர் மட்டும் சிக்குவார் என்று கூறி  வருகின்றனர். சபாநாயகர் மட்டுமல்ல, முதலமைச்சர், கொறடா மூவரும் சட்டவிதிமீறலில் ஈடுபட்டதற்காக சிக்குவார்கள். ஆட்சியும் வெகு விரைவில் வீட்டிற்கு செல்லப் போகிறது.