வெளிநாட்டு வகை சால்வினியா படர் தாவரம் அதிக அளவில் கொடைக்கானல் ஏரியில் பெருகத்துவங்கி பறவைகள் மற்றும் மீன்கள், மேலும் ஆல்லி தாமரை, நீர் பாசைகள் போன்ற நாட்டு நீர்தாவரங்கள் முற்றிலும் அழியும் நிலை இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மத்தியில் அமைந்துள்ளது நட்சத்திர ஏரி, சுற்றுலா பயணிகளின் மனதை கவர்ந்த இந்த ஏரியில், சுற்றுலா பயணிகள் படகு சாவரிசெய்து ஜாலியாக பொழுதை கழிப்பர். இதேபோல பறவைகள் கொண்டாடும் இந்த ஏரியில், மீன்கொத்தி, நீர்க்காகம், தண்ணீர்கோழி, பூச்சி பிடிக்கும் குருவிகள், நாரைவகைகள் என பல்வேறு பறவைகளின் புகலிடமாகவும் இந்த ஏரி உள்ளது.
கோடைக் காலம் முதல் மழைக்காலம் வரை, இங்கு அதிக அளவிலான வித விதமாக பறவைகள் ஏரியைச் சுற்றியுள்ள சோலை மரங்களில் கூடுகட்டி, ஏரியில் உள்ள மீன்களை பிடித்தும், ஏரியின் மேற்பரப்பில் உள்ள பல்வேறு நீர்ப்பூச்சிகளை உணவாக எடுத்தும், இனப்பெருக்கம் செய்து மீண்டும் பனிக்காலத்தில் இங்கிருந்து குஞ்சுகளுடன் இடம் பெயர்வது வழக்கம்.
இத்தகைய பல்லுயிர் சூழல் நிறைந்த ஏரிக்கு, கொடிய ஆபத்து காத்திருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஐந்து மாதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையின்றி கொடைக்கானல் நகரம் முற்றிலும் முடங்கியுள்ளது, இதனால் ஏரிக்குள் பிரம்மாண்ட சால்வினியா என்ற வெளிநாட்டு வகை படர் தாவரம், கொஞ்சம் கொஞ்சமாக பெருகத்துவங்கி, தற்பொழுது ஏரியில் பத்தில் ஒருபங்கு அளவாக மூன்று அடுக்குகளாக வளர்ந்து பெருகியுள்ளது.
ஒருவகைத்தாவரம் இது நீர் நிலைகளின் மேற்பரப்பில் பெருகத்துவங்கும் போது, மூன்று அடுக்குகளாக அடர்ந்து படர்வதால், சூரிய ஒளியை முற்றிலும் நீருக்குள் செல்லவிடாமல் தடுப்பதால். நீரில் உள்ள பிராண வாயுவை தடுத்து, அல்லி தாமரை, நீர்ப்பாசிகள் உள்ளிட்ட நாட்டு நீர் தாவரங்களை, வளரவிடாமல் செய்து, அவை மட்டும் வேகமாக பல்கிப்பெருகும் என கூறப்படுகிறது.
அவ்வாறு சால்வினியா பெருகத்துவங்கும் போது, மற்ற தாவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதோடு சூரிய ஒளியால் கிடைக்கும் பிராணவாயு கிடைக்காமலும், நீர் பாசிகளால் கிடைக்கும் உணவும் கிடைக்காமல், நீருக்குள் உள்ள மீன் வகைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் நீரின் மேற்பரப்பில் இவ்வகை தாவரம் அடர்ந்து படர்வதால், மீன் கொத்திகள் உட்பட மீனை வேட்டையாடும் பல்வேறு பறவைகளுக்கும் உணவு கிடைக்காமல், ஏரியை விட்டு செல்லும் நிலையும் உருவாகும் என, இத்தாவரத்தை பற்றி அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன. இந்த தாவரம் கொடைக்கானல் ஏரியில் பல்கிப்பெருகுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
நட்சத்திர ஏரியின் அபாய நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, போர்க்கால அடிப்படையில் சால்வினியா படர் தாமரையை முற்றிலும் அகற்றினால் மட்டுமே ஏரியின் சூழல் காக்கப்படும் என நகரவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து நகராட்சி ஆணையர் நாராயணனிடம் கேட்டபொழுது, ஏற்கனவே இதனை பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இத்தாவரம் ஏரியில் இருந்து முழுவதுமாக அகற்றப்படும் என்று தெரிவித்தார்;.