எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பின்னணி உடைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவின் சின்ஹா தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. விசாரணையின்போது, குற்றப்பின்னணி உடைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஆனால், குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் முழுவதும் தடைவிதிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனையடுத்து, எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கு எவ்வளவு தொகை செலவிட வேண்டியிருக்கும் என்பதை தெரிவிக்குமாறும் மத்திய அரசிடம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.