டிரெண்டிங்

“பாலின சமத்துவ பயணத்தில் மைல்கல்” - ஐயப்பன் கோயில் தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

“பாலின சமத்துவ பயணத்தில் மைல்கல்” - ஐயப்பன் கோயில் தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

rajakannan

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சமூக நீதி, பாலின சமத்துவம், பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மைல்கல்லாகியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்‌ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என திமுக மகளிர் அணிச் செயலா‌ளரும் , மாநிலங்களவை‌ உறுப்பினருமா‌ன‌ கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொ‌‌‌டர்‌பாக‌ ‌தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும் என்று குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றமும், சட்டமன்றமும் இதைப் பின்பற்றி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நம்புவதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கடவுள் முன்னிலையில் அனைவரும் சமமானவர்கள் என கூறப்படும் நிலையில், ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல விருப்பப்படுபவர்களை அனுமதிக்கலாம் என்பது நல்ல முடிவு என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். , “உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். நான் இதுவரை அந்தக் கோயிலுக்குச் சென்றதில்லை. ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல விருப்பப்படு‌வர்களை அனுமதிக்கலாம். கடவுள் முன்னிலையில் அனைவரும் சமம் என பல்வேறு விதமாக விவரிக்கப்பட்டுள்ளது” என்றார் கமல்ஹாசன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர், ரவிக்குமார் கூறுகையில், “பக்தியை நிரூபிக்க பெண்களை தண்டிக்கக்கூடாது.  பக்தியின் பெயரால் பெண்களை ஒடுக்கி, விலக்கி‌ வைப்பதை ஏற்‌க முடியாது. ஆண்கள் தங்கள் பக்தியை நிரூபிப்‌பதற்கா‌க பெண்களை தண்டிக்‌கக் கூடாது. பழக்க வ‌ழக்கம், பண்பாடு தொடர்பான விஷயங்களில் அரசியலமைப்புச் சட்டமே மேலோங்கும். பக்தி என்ற பெயரில் பெண்களை விலக்கி வைப்பது இனி நடைபெறாது. வருங்காலங்களில் பெண்களும் அர்ச்சகர்களாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழிவகுக்கும்” என்றார்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண் - பெண் பாலின வேறுபாடு கூடாது என்ற அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளைச் சரியாகப் பாதுகாத்த ஒரு வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பு எனக் கூறியுள்ளார். வயதுள்ள பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல உரிமை‌ மறுக்கப்படுவது மனித உரிமைக் கோணத்தில் மாபெறும் தவறான நடவடிக்கை என்றும், இதை மாற்றிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியான தீர்வே என வீரமணி தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.