டிரெண்டிங்

“கோவை எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கலாம்” - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

“கோவை எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கலாம்” - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

webteam

பொள்ளாச்சி விவகாரம் குறித்து கோவை எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க ஆட்சேபனை ஏதும் இல்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அடையாளத்தை கோவை எஸ்.பி பாண்டியராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வாராமல் செய்யும் வண்ணம் கோவை எஸ்பி பாண்டியராஜனின் செயல்பாடுகள் உள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஏராளமான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. 

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளிப்படுத்திய கோவை எஸ்பி மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நேற்று பரிந்துரை ஒன்றை அனுப்பியிருந்தது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அதிகாரிகள் தொடர்பான நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். 

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நடவடிக்கை எடுக்க ஆட்சேபனை இல்லை. அவர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதுதொடர்பான அறிக்கை மட்டும் தேர்தல் ஆணையத்திற்கு அளித்தால் போதுமானது” எனத் தெரிவித்தார்.