திமுக, அதிமுக கட்சிகளின் சொத்துமதிப்பு அதிக அளவில் உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு(ADR) என்ற தனியார் அமைப்பின் சார்பில் இந்தியாவில் உள்ள பிராந்திய கட்சிகளின் சொத்துமதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2011-12 முதல் 2015-16 ஆண்டு வரையில் பிராந்திய கட்சிகளின் சொத்துமதிப்பின் வளர்ச்சி குறித்து பல்வேறு தகவல்களை இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. ஆய்வில் இந்தியாவிலே பிராந்திய கட்சிகளில் சமாஜ்வாடி கட்சிக்குதான் அதிக சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது.
2011-12 ஆம் ஆண்டில் ரூ.212.86 கோடியாக இருந்த சமாஜ்வாடியின் சொத்து மதிப்பு 5 வருடங்களில் கிடுகிடுவென உயர்ந்து 2015-16 இல் ரூ.634.96 கோடியாக அதிகரித்துள்ளது. சமாஜ்வாடி கட்சிக்கு அடுத்தபடியாக திமுகவும், அதிமுகவும் அதிக சொத்துக்கள் உடைய கட்சிகளாக உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. இதில், அதிமுகவை விட திமுகதான் அதிக சொத்துக்கள் கொண்ட கட்சியாக திகழ்கிறது. 2011-12 இல் முறையே ரூ.89.32, ரூ.88.21 கோடிகளாக இருந்த திமுக, அதிமுகவின் சொத்து மதிப்பு 2015-16 இல் ரூ.265.23, ரூ.224.87 கோடிகளாக உயர்ந்தது.
முதல் ஐந்து இடங்களில் சமாஜ்வாடி, திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், சிவசேனா ஆகிய கட்சிகள் உள்ளன. திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தேமுதிக அதிக சொத்து மதிப்பு கொண்ட கட்சியாக உள்ளது. 2011-12 ஆம் அண்டில் ரூ.9.21 கோடியாக இருந்த தேமுதிக சொத்து மதிப்பு சரிந்து 2015-16 இல் ரூ.4.458 கோடியாக ஆனது. மொத்தத்தில், பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ.480 கோடியில் இருந்து ரூ.1315 கோடியாக உயர்ந்துள்ளது.