தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் மற்றும் 5 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது
மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக – 2, அதிமுக – 0, நாம் தமிழர் – 0, அமமுக – 0, மநீம – 0 என்ற நிலையில் முன்னிலை நிலவரம் உள்ளது.
மொத்தமுள்ள 1381 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக – 5, அதிமுக – 0, நாம் தமிழர் – 0, அமமுக – 0, மநீம – 0 என்ற நிலையில் முன்னிலை நிலவரம் உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதல்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகளும், 2 ஆம் கட்டத் தேர்தலில், 78.47 சதவிகித வாக்குகளும் பதிவாகின. இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் 70.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் 74 மையங்களில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தால் ஆன தடுப்புகளுடன் மேஜைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் இடங்களில் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.