டிரெண்டிங்

ராஜ்ய சபா தேர்தல் - சொகுசு விடுதியில் குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள்

ராஜ்ய சபா தேர்தல் - சொகுசு விடுதியில் குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள்

rajakannan

குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர், சமீபத்தில் நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதனால், காலியான அந்த இடங்களுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவுபடி, இரு இடங்களுக்கும் தனித்தனியே தேர்தல் நடைபெறுகிறது. 

இத்தேர்தலில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஓ.பி.சி. தலைவர் ஜூகல்ஜி தாகோர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சந்திரிகா சுதாசமா, கவுரவ் பாண்ட்யா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 182 உறுப்பினர்களைக் கொண்ட, குஜராத் பேரவையில் 175 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 100 பேரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 71 பேரும் உள்ளனர். 

தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பதை தடுக்கும் வகையில், 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு பேருந்தில், பனாஸ்கந்தாவில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக அவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு மாநிலங்களவைக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற போதும் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.