மதுரையில் மியூட்சுவல் ஃபண்ட்-ல் பணம் செலுத்தி அதிக பணம் ஈட்டலாம் எனற வார்த்தையை நம்பி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரூ.5 லட்சத்தை பறிகொடுத்தார்.
மதுரை குலமங்கலம் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராமலிங்கம். இவரிடம் தொலைபேசி வாயிலாக பிரபல வங்கியின் பெயரில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி மற்றும் தினகரன் ஆகியோர் பேசியுள்ளனர். மியூட்சுவல் ஃபண்ட் மற்றும் நிரந்தர வைப்புத்தொகை உள்ளிட்ட திட்டங்களில் பணம் செலுத்தினால், அதிக வட்டி பெற முடியும் என அவர்கள் ராமலிங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தொடர்ந்து பரிந்துரையும், அழுத்தமும் கொடுத்ததன் பேரில் குழம்பிய ராமலிங்கம், தன்னுடைய ஓய்வு தொகையிலிருந்து ரூ.5 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். ராமலிங்கம் வழங்கிய தொகைக்கு அவர்கள் ரசீது ஒன்றையும் கொடுத்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள சம்மந்தப்பட்ட வங்கியில் ராமலிங்கம் விசாரித்தபோது, அவர்கள் கொடுத்த ரசீது முறைகேடானது என தெரியவந்துள்ளது.
இதையடுத்து தன்னிடம் நூதன முறையில் மோசடி செய்த நபர்கள் குறித்து ராமலிங்கம் மதுரை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் லட்சுமி மற்றும் தினகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.