டிரெண்டிங்

“இடஒதுக்கீடு எதிர்ப்பு மனநிலையை கைவிடுங்கள்” - ஆர்.எஸ்.எஸுக்கு மாயாவதி கோரிக்கை

rajakannan

இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலையை ஆர்.எஸ்.எஸ் கைவிட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்கள் இடையே கலந்துரையாடல் நடைபெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். இருதரப்பினரிடையேயான இடஒதுக்கீடு குறித்த உரையாடல் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என அவர் கூறினார். இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலையை ஆர்.எஸ்.எஸ் கைவிட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாயாவதி தன்னுடைய ட்விட்டரில், “எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக வெளிப்படையாக விவாதம் நடத்த வேண்டும் எனவும் அப்படி நடத்தினால் சந்தேகங்கள் தீரும் எனவும் கூறுகிறது. இது தேவையற்ற ஒன்று. மனிதாபிமான அடிப்படையில் அரசியலமைப்பு வழங்கிய இடஒதுக்கீட்டை சேதப்படுத்துவது அநீதியானது” என்று கூறியுள்ளார். 

அதேபோல், இடஒதுக்கீடு குறித்து எவ்வித விவாதமும் தேவையில்லை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். “எஸ்.சி எஸ்.டி மக்களுக்கு மட்டுமல்ல பிற சமுதாயத்தினரும் இடஒதுக்கீடு பெறுகிறார்கள். அதனால், இடஒதுக்கீட்டில் கைவைக்கக் கூடாது. அது அப்படியே இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.