டிரெண்டிங்

பெரம்பலூருக்கு முதல்வர் வருகை: அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகள் அகற்றம்

பெரம்பலூருக்கு முதல்வர் வருகை: அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகள் அகற்றம்

webteam

பெரம்பலூரில் முதலமைச்சர் வருகையையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடியை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்.

அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து இன்று இரவு முதலமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்காக காமராஜர் வளைவு பகுதியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்சி கொடிகளும் வைக்கப்பட்டுள்ளன. அதே போல் பாலக்கரையில் உள்ள ரவுண்டானாவை சுற்றி அதிமுக கொடி கம்பங்களில் ஏற்றப்பட்டிருந்தன.

இதையறிந்த தேர்தல் அதிகாரிகள் அங்குவந்து பாலக்கரையில் கொடி வைப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறி அதிமுக கொடியை அகற்றுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து பாலக்கரை ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது “பெரம்பலூர் தெற்கு, பெரம்பலூர் வடக்கு, துறைமங்கலம், எளம்பலூர் என நான்கு பகுதிகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை, துறைமங்கலம், ரோவர் வளைவு, நான்கு ரோடு, வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகள் அகற்றப்பட்டது” எனத் தெரிவித்தனர். இது தொடர்பாக அதிமுகவினர் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.