டிரெண்டிங்

மக்களவைத் தேர்தலில் ‌76 பெண் வேட்பாளர்கள் வெற்றி

மக்களவைத் தேர்தலில் ‌76 பெண் வேட்பாளர்கள் வெற்றி

webteam

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 716 பெண் வேட்பாளர்களில்‌‌ ‌76 ‌பேர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் 66 பெண்‌ எம்பிக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் 542 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை 716 பெண் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதில் 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தலில் அதிக தொகுதிகளை வென்றுள்ள பாஜக, 4‌7 பெண்களை வேட்பாளர்களாக களமிறக்கியது. இதில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 54 பெண் வேட்பாளர்களில்‌ சோனியா காந்தி‌, ஜோதிமணி உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல் 24 பெண்களை நிறுத்திய பகுஜன் சமாஜ்‌ கட்சியில் ஒரே ஒரு வேட்பாளரும், சுயேச்சையாக போட்டியிட்ட 222‌ பெண் வேட்பாளர்களில் ‌ஒரே ஒருவர் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளார். தற்போது எம்.பி.யாக உள்ள 41 பெண்களில், 28 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சோனியா, ஹேமமாலினி உள்ளிட்டோரும் அடங்குவர். 

தமிழகத்தில் திமு‌க சார்பில் போட்டியிட்ட‌ கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியும் வெற்றி பெற்றுள்ளனர்.