டிரெண்டிங்

சீர்திருத்தங்களுக்கு மக்கள் தயார்: வெற்றிக்கு பின் மோடி பேச்சு

சீர்திருத்தங்களுக்கு மக்கள் தயார்: வெற்றிக்கு பின் மோடி பேச்சு

rajakannan

பாஜக கொண்டு வந்த சீர்திருத்தங்களை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் சட்டசபை தேர்தல்களில் பாஜக மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. குஜராத் மாநிலத்தை தக்க வைத்த போதும், இமாச்சல பிரதேசத்தை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கைப்பற்றியுள்ளது. வெற்றியை தொடர்ந்து  டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தலைமை அலுவலகத்தில் பேசிய மோடி, தனிப்பட்ட முறையில் குஜராத் வெற்றி தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் அவர் பேசுகையில், “நான் முதலமைச்சராக இல்லாத போதும் என்னுடைய சகாக்கள் நன்றாக பணியாற்றியுள்ளது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. மோடி இல்லாத நிலையில் குஜராத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது பொய்யாகியுள்ளது. முடிவெடுக்கும் திறன் கொண்ட அரசு அமைந்துள்ளது நாட்டு மக்களுக்கு தெரிந்துள்ளது.

வளர்ச்சி இல்லை என்றால் மக்கள் தண்டிப்பார்கள் என்பதை இமாச்சல பிரதேச தேர்தல் காட்டியுள்ளது. உத்திரபிரதேச தேர்தலின் போது ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாஜக தோல்வி அடையும் என்று கூறப்பட்டது. அதேபோல், தற்போதைய குஜராத் தேர்தல்களின் போது ஜிஎஸ்டியால் பாஜக தோல்வி அடையும் என்று பேசப்பட்டது. ஆனால் பாஜக வெற்றி பெற்றது.

தற்போதைய தேர்தல் முடிவுகள் நாடு சீர்திருத்தத்திற்கு தயாராக உள்ளதை காட்டுகிறது. மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். குஜராத்தில் காங்கிரஸ் கட்சியால் பல்வேறு சதி செயல்கள் மேற்கொள்ளப்பட்டது. தவறான தகவல்கள் நிறைய பரப்பப்பட்டன. 

30 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் மோசமான முறையில் ஜாதி முரண்பாடுகள் பரவி இருந்தது. என்னைப் போன்ற ஊழியர்கள் அதனை தான் கடந்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக ஜாதியத்தின் மூலம் பலனை அடைய முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் மக்கள் அதனை புறக்கணித்துவிட்டார்கள். குஜராத் தேர்தல் முடிவுகள் வரலாற்று சிறப்புமிக்கது. இதேபோல் பாஜக அதிக வெற்றிகளை நீண்ட காலம் பெறவேண்டும்” என்றார்.