வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் ஏற்றுக் கொள்கிறோம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். கரூர் நெரூர் பகுதியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடம் பல்வேறு குறைகள் தொடர்பாக மனுக்களை பெற்று. உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.பின்னர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டியளிக்கையில், தமிழகத்தில் இருந்து சிலைகள் பல வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு உள்ளதால், இதை மத்திய அரசுடன் மீட்க வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. பல வழக்குகளை சிபிஐக்கு மாற்ற எதிர்கட்சிகள் கோரிக்கை விடுக்கும் நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்
மேலும் “தேர்தல் வாக்குச் சீட்டு, வாக்குப் பதிவு இயந்திரம் என எப்படி நடத்தினாலும், ஏற்றுக் கொள்கிறோம். பல நாடுகளில் இயந்திரம் முறை ரத்து செய்யப்பட்டு, வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. எதிர்கட்சிகள் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது தவறில்லை. வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதை வரவேற்கிறோம் என்றார்.