டிரெண்டிங்

ஐபிஎல் போட்டிகளில் அஸ்வின் தொடர்ந்து விளையாடுவதில் சிக்கல் ?

jagadeesh

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

துபாயில் நேற்று ஐபிஎல் போட்டியின் 2-வது லீக் ஆட்டம், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்தது. இப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றிப்பெற்றது. பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றிப் பெறுவதற்கு திருப்புமுனையாக இருந்தது அஸ்வின் வீசிய ஓவர் என்றால் அது மிகையல்ல.

அஸ்வின் தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பஞ்சாப் அணி வீரர் கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின், 5-வது பந்தில் நிகோலஸ் பூரனுக்கு கேரம் பால் பந்துமூலம் அவரை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார். பின்பு தான் வீசிய கடைசிப்பந்தை தடுக்க முயன்று தாவியபோது அஸ்வினின் இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. கையைத் தூக்க முடியாமல் அவதிப்பட்ட அஸ்வினை, தாங்கிப்பிடித்துக்கொண்டு மருத்துவர் பெவிலியனுக்கு அழைத்துச் சென்றார்.

இதுகுறித்து டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக் பார்ஹார்ட் "அஸ்வினின் இடது தோள்பட்டை இணைப்பு எலும்பு நகர்ந்துள்ளது. அதனால் அஸ்வினுக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டது. தற்போது தோள்பட்டையில் கட்டுப்போடப்பட்டுள்ளது. காயத்தின் தன்மை குறித்து இப்போது ஏதும் கூற முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.