டிரெண்டிங்

“டிடிவி தினகரன் கட்சியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்” - ரத்தின சபாபதி 

webteam

அதிருப்தி எம்.எல்.ஏவாக இருந்த ரத்தினசபாபதி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு எம்.எல்.ஏ ரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்ததும் அதைவிட்டு விலகிவிட்டேன். திரும்ப இந்த இயக்கத்தில் இணைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். தடம் மாறி போயிருந்த என்னை மீண்டும் தாய் கழகத்தில் சேர்த்த பெருமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையே சாரும். 

முன்புபோல் மீண்டும் அதிமுகவில் தொடர்ந்து செயல்பட முனைப்பாக உள்ளேன். டிடிவி தினகரன் கட்சியை மக்கள் புறக்கணித்து விட்டார்கள். ஆரம்பத்திலிருந்தே இந்த இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்தவன் நான். காரணம், இந்த இயக்கத்தின் ஆரம்ப கால தொண்டன் நான். இந்த இயக்கம் என்னை வளர்த்தது. நான் இந்த இயக்கத்தை வளர்த்தேன். மீண்டும் வெற்றியை பெற வேண்டும். டிடிவி அணியில் இருக்கும் அனைவரும் இந்த இயக்கத்தில் சேர்ந்து முன்புபோல் வலுவோடு நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதுதான் ஜெயலலிதாவின் உண்மையான அதிமுக எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். பிரபு, கலைச்செல்வன் விரைவில் தாய் கழகத்தில் இணைவார்கள்” எனத் தெரிவித்தார்.