டிரெண்டிங்

கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடுதல் தொடரும்: ராஜ்நாத் சிங்

கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடுதல் தொடரும்: ராஜ்நாத் சிங்

webteam

ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களில் கடைசி நபர் கிடைக்கும் வரை தேடும் பணி நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

ஒகி புயல் பாதிப்புகள் தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விரிவான விவாதத்துக்கு பதிலளித்து ராஜ்நாத் சிங் பேசினார். கடந்த மாதம் 29ஆம் தேதி வரை காற்றழுத்தத் தாழ்வு நிலையாக இருந்த நிலையில், திடீரென வலு‌ப்பெற்று புயலானதாக கூறிய ராஜ்நாத் சிங், அதற்கு முன்பாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதால் பலர் கரை திரும்ப இயலாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். 30ஆம் தேதியே தேடுதல் வேட்டையை தொடங்கிய கடலோர காவல்படை மற்றும் கப்பற்படையினர் மோசமான வானிலைக்கு இடையேயும் நூற்றுக்கணக்கான தமிழக, கேரள மீனவர்களை மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், கடைசி மீனவரை மீட்கும் வரை தேடுதல் பணி தொடரும் என்றும், தமிழக, கேரள அரசுகளுக்கு ஒகி புயல் பாதிப்பு நிவாரண உதவியைப் பொருத்தவரை விரைவில் அந்தப் பகுதிகளுக்கு மத்திய குழுவினர் செல்ல உள்ளதாகவும் கூறினார். மேலும் அக்குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். முன்னதாக, ஒகி புயல் பாதிப்பு குறித்து மக்களவையில் அதிமுகவின் சுந்தரம், கேரளாவின் சசிதரூர், வேணுகோபால் உள்ளிட்ட பல எம்.பி.க்கள் கேள்விகளை எழுப்பினர்.