டிரெண்டிங்

“முதல்வர் பதவி வேண்டாம்” - நடிகர் ரஜினிகாந்த்

“முதல்வர் பதவி வேண்டாம்” - நடிகர் ரஜினிகாந்த்

webteam

முதல்வர் பதவியை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது “கடந்த முறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தகவல்கள் மாவட்ட நிர்வாகிகள் மூலம் வெளியே வரவில்லை. அதை நான் பாராட்டுகிறேன். 1996 ல் இருந்து நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிதான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். அதற்கு முன்பு அரசியலுக்கு வருவீர்களாக என்று கேட்டால் ஆண்டவன் கையில் உள்ளது என்றுதான் சொன்னேன்.

இனிமேலாவது அதுபோன்று சொல்ல மாட்டார்கள் என நம்புகிறேன். 1996-ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக எனது பெயர் அரசியலில் அடிபட்டது. அப்போது நான் மிகவும் போற்றும் கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோருடன் பழகிய விதத்தில் அரசியலை தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தேன்.

ஜெயலலிதா இறந்த பின்பு 2017-ஆம் ஆண்டில் வலிமையான ஆட்சி இல்லாமல் இருந்தபோது நான் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னேன். சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என சொன்னேன். மக்கள் மனதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். முதல்வராக வேண்டும் என்பதை நினைத்து கூட பார்த்தது இல்லை. ரஜினிகாந்த் ஒரு பாலமாக இருக்க வேண்டும். கட்சிக்கு ஒரு தலைமை. ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது எனது முடிவு. நான் அரசியல் அறிவிப்பு வெளியிடும்போதே பதவி ஆசை இல்லை என்றுதான் சொன்னேன்” எனத் தெரிவித்தார்.