டிரெண்டிங்

காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: ரஜினி கருத்து

காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: ரஜினி கருத்து

rajakannan

நீண்ட வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் ஒருவழியாக இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பில், காவிரி நடுவர் நீதிமன்றம் 2007-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் பெரும்பாலானவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், முக்கியமானதாக தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரின் அளவை குறைத்துள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதில் இருந்து 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்பட்டு, அதில் 177.25 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல், தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட தண்ணீர் கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீர்ப்பு வெளியானது முதல் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்து இருந்த ரஜினி, கமல் என்ன கருத்து சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கமல் தீர்ப்பு குறித்து தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்து இருந்த நிலையில், ரஜினி எந்த கருத்தையும் கூறவில்லை என்று விமர்சனங்கள் எழ தொடங்கியது. சமூக வலைதளங்களிலும், ரஜினி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.

இந்நிலையில், ரஜினி காவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில், “காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.