டிரெண்டிங்

‘தமிழர் தமிழர்னு சொல்றாங்க குடியுரிமை கொடுக்கல’ ரஜினி ஆதங்கம்!

‘தமிழர் தமிழர்னு சொல்றாங்க குடியுரிமை கொடுக்கல’ ரஜினி ஆதங்கம்!

webteam

இலங்கையில் இருந்து வந்த தமிழர்களுக்கு இன்னும் குடியரிமை வழங்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ் திரையுலகினர் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர். இதில் நடிகர் ரஜினிகாந்த்,
கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பங்கேற்றனர். முன்னதாக வீட்டில் இருந்து புறப்படும் போது ரஜினி
செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ‘கமல்ஹாசன் உங்களை ஆன்மிக கொள்கைப்படி எதிரியாக பார்ப்பதாக கூறியுள்ளார். இதை
நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “என்னுடைய எதிரி கமல் இல்லை. ஏழ்மை, லஞ்சம், வேலையின்மை, விவசாயிகள் மற்றும்
மீனவர்களின் கண்ணீர்தான் எனது எதிரி. இலங்கையில் இருந்த வந்த தமிழர்களுக்கு இதுவரை குடியுரிமை வழங்கவில்லை. தமிழர்
தமிழர்னு சொல்றாங்க (அரசியல்வாதிகள்) என்ன பண்ணாங்க இவங்க. இதுயெல்லாம் தான் என் எதிரி’ என்று கூறினார்.  

இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடர்பாக பேசிய ரஜினி, “காவிரிக்காக தமிழகமே போராடும் போது, ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லதுதான். அப்படி இல்லையென்றால் மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த ஐபிஎல்லில் சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம். காவிரிக்காக போராடும் சூழலில் கர்நாடகத்தை சேர்ந்தவரை துணைவேந்தராக நியமித்திருக்க வேண்டாம். கர்நாடகாவில் எனது படத்தை வெளியிடாமல் தடுத்தால் தயாரிப்பாளர்கள், மாநில அரசு பார்த்துக் கொள்ளும். ” என்றார்.