மே 23 ஆம் தேதிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்களா..? என்ற கேள்விக்கு “ என்னுடைய அரசியல் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதனை ஏற்கெனவே கூறிவிட்டேன். ஊடகங்கள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி எனக்கும் கமலுக்கும் இடையே உள்ள நட்பை கெடுத்துவிடாதீர்கள்.
நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பகீரத் என பெயர் வைக்க வேண்டும் என ஏற்கெனவே வாஜ்பாயிடம் வலியுறுத்தியிருந்தேன். தற்போது நதிகள் இணைப்புக்கு தனி அமைச்சகம் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நதிகளை இணைத்தால் நாட்டில் இருந்து வறுமை போய்விடும். பல கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும். நதிகளை இணைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் அதிகம் பேச விரும்பவில்லை” என தெரிவித்தார்.
இதையடுத்து மக்களவை தேர்தலுக்கு அடுத்த நாள் சென்னை போயஸ் கார்டனிலுள்ள தன்னுடைய இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ட்விட்டரில் "அடுத்த ஓட்டு ரஜினிகாந்த்துக்கு" என ட்ரெண்டிங் குறித்த கேள்விக்கு.. ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள், அவர்களை ஏமாற்றமாட்டேன் எனக் கூறினார்.
இந்நிலையில், மே 23 ஆம் தேதிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார். திருப்பூர் - சின்னாண்டிபாளையத்தில் உள்ள சித்ரகுப்தர் கோயிலில் நடைபெற்ற சித்ராபௌர்ணமி திருவிழாவில் அவர் பங்கேற்று வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யநாராயண ராவ், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு ரஜினிகாந்த் கூறவில்லை என்றார். ரஜினிகாந்த் - கமலஹாசன் நட்பு திரைத்துறைப் போலவே அரசியலிலும் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.