ஒற்றை தலைமை விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் எனவும் இரட்டை தலைமையால் எந்த ஒரு முடிவையும் உடனடியாக எடுக்க முடியவில்லை எனவும் மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை கிளப்பினார். இதையடுத்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டர். அதன்படி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூட்டம் நிறைவடந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஒற்றை தலைமை விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டுமென நிர்வாகிகள் கட்சியினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது உள்ளபடியே அதிமுக செயல்படும். பொதுக்குழு கூட்டுவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் முடிவு எடுப்பார்கள். தற்போது உள்ளபடியே இருக்கட்டும் என ராஜன் செல்லப்பாவும் ஒப்புக்கொண்டார். உள்ளே எப்படி சிரித்து கொண்டே சென்றோமோ அப்படியே சிரித்து கொண்டேதான் வெளியே வருகிறோம்” எனத் தெரிவித்தார்.