டிரெண்டிங்

மழையால் இடிந்த வீடு... மண்ணில் புதைந்த நாதஸ்வர கலைஞர்

மழையால் இடிந்த வீடு... மண்ணில் புதைந்த நாதஸ்வர கலைஞர்

kaleelrahman

கனமழையால் வீடு இடிந்து உயிரிழந்த நாதஸ்வர கலைஞரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது. 


மதுரை மாவட்டம் அவனியாபுரம் செம்பூரணி கிராமத்தில் உள்ள ஊரணி கரையை ஒட்டி 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 55 வயதுடைய நாதஸ்வர கலைஞரான மூக்கையா என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவனியாபுரம் பகுதியில் பெய்த கனமழையால் ஊரணியில் நீர் பெருக்கெடுத்த நிலையில், மூக்கையா வசித்த செம்மண் வீடு மழை நீரில் ஊறி வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த மூக்கையா மீது விழுந்ததில் தூக்கத்திலே உயிரிழந்துள்ளார். 


மூக்கையா உயிரிழந்தது யாருக்கும் தெரியாத நிலையில் இன்று காலை மூக்கையா வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூக்கையாவின் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மழையால் வீடு இடிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்த இசைக்கலைஞரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.