டிரெண்டிங்

அதிவேகப் பந்துவீச்சாளரின் மகன்... அமெரிக்காவின் பதக்க நம்பிக்கை வீரர் ராய் பெஞ்சமின்!

அதிவேகப் பந்துவீச்சாளரின் மகன்... அமெரிக்காவின் பதக்க நம்பிக்கை வீரர் ராய் பெஞ்சமின்!

Sinekadhara

கிரிக்கெட் களத்தில் அதிவேகப் பந்துவீச்சாளராக ஜொலித்தவரின் மகன் டோக்கியோ ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டும் பிரிவில் அமெரிக்காவின் பதக்க நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார்.

தந்தையின் கிரிக்கெட் வேகத்தை தடகளத்தில் பிரதிபலிக்கும் மகன்: 1980, 90 காலகட்டங்கள் அது. மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் களங்களில் அசைக்கமுடியாத படையாக வலம்வந்த வருடங்கள் அவை. அத்தகைய காலகட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேக அஸ்திரமாக வலம் வந்தவர் வின்ஸ்டன் பெஞ்சமின்.

தனது வேகப்பாய்ச்சலால் எதிரணி பேட்ஸ்மேன்கள் 'ரிட்டையர்டு ஹர்ட்' ஆகும் அளவிற்கு பதம் பார்த்த வின்ஸ்டனின் மூத்த மகன் ராய் பெஞ்சமினும் வேகப்புயலாகவே உருவெடுத்துள்ளார். ஆனால், ராய் பெஞ்சமின் தேர்ந்தெடுத்த களம் வேறு. தடைகளை தகர்த்து காற்றைக் கிழித்து பாயும் தடை தாண்டும் ஓட்டம் அது.

சிறுவயதில் மேற்கிந்திய தீவுகளின் ஆண்டிகுவாவில் வளர்ந்த ராய் பெஞ்சமின், சொந்த ஊரில் தடகளத்திற்கு போதிய உதவியும், ஊக்கமும் கிடைக்காததால் தாயுடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். மகனின் கனவுப் பாதைக்கு வின்ஸ்டனும் வழியமைத்துக் கொடுத்தார். திறமைகளை வளர்த்து தடகளப் பிரிவில் தன்னை மெருகேற்றிக் கொண்ட ராய் பெஞ்சமின் அமெரிக்காவுக்காக உள்ளூர் ஓட்டங்கள் முதல் உலக சாம்பியன்ஷிப் ஓட்டங்கள் வரை மிளிர்ந்தார்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்காவின் பதக்க நம்பிக்கையாக பார்க்கப்படுகிறார் ராய் பெஞ்சமின்.

அமெரிக்கா சார்பில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்பவர்களுக்காக நடத்தப்பட்ட தகுதிச் சுற்றில் 46.83 நொடிகளில் இலக்கைக் கடந்து வியக்க வைத்தார் ராய். ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை ஓட்டத்தின் சாதனை என்பது 46.78 விநாடிகளே. 0.05 விநாடிகளில் ஒலிம்பிக் சாதனை நேரத்தை முறியடிக்க தவறிய ராய், டோக்கியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் உலக சாதனையை நிகழ்த்துவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உதிர்த்த வார்த்தைகளை உண்மையாக்கும் வகையில் தடை தாண்டும் ஓட்டத்தின் சாதனைப் புத்தகத்தில் ராய் தடம் பதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.