டிரெண்டிங்

தொழிலதிபர்களுக்கு ரூ.33000 கோடி, மீனவர்களுக்கு ரூ.300 கூட கிடையாது: மோடியை விமர்சித்த ராகுல்

webteam

தொழிலதிபர்கள் சென்றால் பிரதமர் மோடி ரூ.33000 கோடி கொடுக்க தயாராக உள்ளார், ஆனால் ஒரு மீனவர் சென்றால் 300 ரூபாய் கூட கொடுக்க மறுக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். போர்பந்தரில் மீனவ மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்திற்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்துவோம். மீனவ மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்போம். தொழிலதிபர்கள் சென்றால் பிரதமர் மோடி ரூ. 33000 கோடி கொடுக்கவும் தயாராக உள்ளார், ஆனால் ஒரு மீனவர் சென்றால் 300 ரூபாய் கூட கொடுக்க பிரதமர் மோடி தயாராக இல்லை.

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற நடந்த சதிதிட்டமே மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை. குஜராத் மாநிலம் 10 தொழிலதிபர்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது, விவசாயிகள், தொழிலாளிகள், மீனவர்கள் மற்றும் நடுத்தர தொழிலதிபர்களுக்கும் சொந்தமானது. கடந்த சில ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் அனைத்து பணிகளும் 10 தொழிலதிபர்களுக்காகவே செய்யப்பட்டு உள்ளது. அந்த தொழிலதிபர்கள் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு செலவு செய்கிறார்கள். 

காங்கிரஸ் கட்சியும், நானும் உங்களிடம் எங்களுடைய ’மன் கி பாத்தை’ பேச விரும்பவில்லை, உங்களுடைய ’மன் கி பாத்தை’ கேட்கவே வந்துள்ளோம். காங்கிரஸ் கட்சி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.33000 கோடி வழங்கியது. ஆனால் அதே அளவு பணத்தை பிரதமர் மோடி டாடா நானோவிற்கு வழங்கினார். நீங்கள் உங்களுடைய நிலம், தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை டாடா நானோவிற்காக இழந்துவீட்டீர்கள். இப்போது நீங்களே சொல்கிறீர்கள் டாடா நானோவை எங்கேயும் பார்க்கவில்லை" என்று கூறினார்.