புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பட்டினம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பெண் தாதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
காரைக்காலில் முன்னாள் சபாநாயகர் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பெண் தாதா எழிலரசி, காரைக்காலில் மேலும் ஒரு வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள புதுவை சட்டப் பெரவைத் தேர்தலில் திருப்பட்டினம் தொகுதியில் போட்டியிடுவதற்காக தயார் நிலையில் இருந்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக புறப்பட்டு வந்தபோது போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ததி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே எழிலரசி சார்பில் அவருடைய சகோதரர் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது வேட்பாளர், வேட்புமனு தாக்கல் செய்யும்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முன்பு உறுதிமொழி படிவத்தில் நேரில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அவரது மனுவில் உள்ள ஒரு சில குறைபாடுகளை சரிசெய்ய அதிகாரிகள் தெரிவித்த நிலையில், எழிலரசியை போலீசார் கைது செய்ததால் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள முடியவில்லை.
மேலும் ஆவணங்களுக்கு தேவையான தகவல்களையும் கொடுக்க முடியாத காரணத்தினால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது பிரபல தாதா எழிலரசி தேர்தலில் போட்டியிட முயற்சித்ததும் அவரை போலீசார் கைது செய்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சம்பவம் காரைக்கால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.