டிரெண்டிங்

பெண் அலுவலர்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடி!

webteam

மக்களவை தேர்தலில் முதல் முறையாக பெண் அலுவலர்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்க உள்ளதாக புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றது. 

இந்நிலையில் புதுச்சேரி முழுவதும் 970 வாக்குச்சாவடிகள் உள்ள சூழலில் களத்தில் 18 வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆகவே ஒவ்வொரு வாக்குச்சவடிக்கும் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவு எண்ணை, சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் அருண் மற்றும் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அருண் புதியதலைமுறைக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, வாக்களிக்க செல்லும் வாக்களர்களுக்கான அனைத்து வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யும் பணி தொடங்கியுள்ளதாகவும், இந்த தேர்தலில் முதல்முறையாக பெண் அதிகாரிகள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதற்கான வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.