டிரெண்டிங்

எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார் கிரண் பேடி: நமச்சிவாயம்

எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார் கிரண் பேடி: நமச்சிவாயம்

webteam

ஆளுநர் போல் செயல்படாமல் எதிர்க்கட்சி தலைவர் போல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி செயல்படுவதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆட்சி மற்றும் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் யார் தடையாக இருந்தாலும் அதை எதிர்க்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்று கூறினார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய நமச்சிவாயம், துணைநிலை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும், அரசுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும், தவறான செய்திகளை மக்களிடத்தில் திரித்து கூற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் தேர்தல் நேரங்களில் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்த திட்டங்களை செயல்படுத்தும்போது யார் தடையாக இருந்தாலும் அதை எதிர்க்க காங்கிரஸ் அரசும், காங்கிரஸ் இயக்கமும் தயாராக உள்ளது என்று தெரிவித்தார். டெல்லியில் தேர்தலில் நின்று டெபாசிட் கூட வாங்க முடியாமல் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கிரண் பேடி, தற்போது புதுவைக்கு வந்து மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு இடையூறாக இருந்து வருகிறார் என்றும், இதை எதிர்த்து மக்கள் பிரச்னைக்காக காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது என்றும் தெரிவித்தார்.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி கூறியது குறித்து கேட்டதற்கு, முதலமைச்சர் சொல்லும் அனைத்திற்கும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உறுதியோடு நிற்கின்றோம் என்று கூறினார். மேலும் ஆளுநரிடம் பல்வேறு கோப்புகள் அனுப்பியும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. விமானப் போக்குவரத்து தொடங்குவதற்கு ஆளுநர் தடையாக உள்ளதாகவும், இதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஆளுநர் தடையாக இருப்பதால் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் கிடப்பில் உள்ளது என குற்றம்சாட்டினார். மேலும், கிரண் பேடி ஆளுநர் போல் செயல்படாமல் எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுவது வேதனைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது என நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.